"தேசிய விழிப்புணர்வின் வீடு தமிழகம்" - பிரதமர் புகழாரம்..!

0 4507

காந்திய விழுமியங்கள் இன்றைய பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கும் எனவும், காந்தி கூறியபடி, சுயசார்பு இந்தியா எனும் இலக்கை அடைய, மத்திய அரசு பாடுபடுவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். தேசிய விழிப்புணர்வின் வீடாக, தமிழகம் திகழ்வதாகவும் பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க திண்டுக்கல் அம்பாத்துரைக்கு, ஹெலிகாப்டரில் வந்திறங்கிய பிரதமர் மோடியை, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் காரில் நின்றபடி, தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை பார்த்து கையசைத்தபடி, பிரதமர் மோடி சென்றார்.

காந்திகிராம பல்கலைக்கழகத்தில், பிரதமர் மோடிக்கு, பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டு, காந்தி குல்லா அணிவிக்கப்பட்டது. விழாவில், சிறந்த மாணவர்கள் 4 பேருக்கு பிரதமர் தங்கப்பதக்கம் வழங்கினார். இசைஞானி இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன் ஆகியோருக்கும், கவுரவ டாக்டர் பட்டங்களை பிரதமர் வழங்கினார்.

விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, காந்தி கூறியபடி, சுயசார்பு இந்தியா எனும் இலக்கை அடைய, மத்திய அரசு பாடுபடுவதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, காந்திய விழுமியங்கள் இன்றைய பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். கிராமத்தின் ஆன்மா, நகரத்தின் வசதி என்பதே, மத்திய அரசின் நோக்கம் எனவும் தமிழில் பிரதமர் கூறினார்.

தேசிய விழிப்புணர்வின் வீடாக தமிழகம் திகழ்வதாகவும், ஆங்கிலேயருக்கு எதிராக வேலு நாச்சியார் வாள் ஏந்தியது, தேசப்பற்றின் உச்சம் எனவும், பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்.

காசியில் தமிழ் சங்கமம் விரைவில் நடைபெறும் என்றும், தமிழர்களின் மொழி - கலாச்சாரத்தை கொண்டாட, காசி தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சங்க கால உணவு பொருள்களை மீண்டும் விளைவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

விழாவில் 2,314 மாணவ -மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. ஆளுநர் ஆர்என். ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments